தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆளுநராக செயல்படவில்லை என்றும், அவர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் ஆளுநராக செயல்படவில்லை. அவர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அதேபோல தான் மதுரை பல்கலைக்கழகத்தில் 101 வயது நிரம்பியுள்ள சங்கரய்யா அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகமும், மதுரை செனட் கழகமும் சேர்ந்து தீர்மானம் அனுப்பி ஆளுநருக்கு அனுப்பினார்கள். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அவர் சொன்ன பிறகு மீண்டும் அதனை ஆட்சி மன்றத்திலேயும் ஆட்சி மன்ற குழுவிலேயும் நிறைவேற்றி அனுப்பினர். அதற்கும் ஆளுநர் இதுவரை பதில் அளிக்கவில்லை. நவம்பர் 2ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது. ஆகவே இன்னும் 2 நாள் இருக்கிறது. எனவே அதற்குள் ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம்.
சுதந்திர போராட்டத்திற்காக பல தியாகங்களை செய்த சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் அளிக்கலாம். நவம்பர் 2ம் தேதிக்குள் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம். எல்லாவற்றிற்கும் தடையாக இருப்பவர் அவர் தான்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் இது கூட்டாட்சி நாடு என்று, ஆனால் அதனை ஒற்றை ஆட்சியாக பார்ப்பதற்கு பாஜக முயற்சி செய்கிறது. ஒரே நாடு ஒரே அரசு என்ற தலைப்பிலே அவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்றே தெளிவாக விளக்கியுள்ளார். இது ஆளுநருக்கும் புரியும் என்று நினைக்கிறேன். அவர் இதையெல்லாம் தெளிவாக புரிந்துகொண்டு தான் அவரே இன்றைக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்பிக்கொண்டு இருக்கிறார். அவரே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்பிவிட்டு அவரே தற்போது இப்படி செய்து வருகிறார். பாஜகவை சேர்ந்தவர்களை வைத்து இந்த வேலைகளை செய்துவிட்டு இப்போது இந்த அரசின் மீது குற்றம் சுமத்தும் அளவிற்கு வந்துவிட்டார். இது மாநில உரிமைகளுக்கு உள்ள சவால் என்று முதல்வர் ஸ்டாலினே சொல்லிவிட்டார். இதனால் தான் நாங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.