எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-
எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரின் ஆப்பிள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்னுடைய அலுவலகத்திலும் சிலருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. காங்கிரஸில் கே.சி. வேணுகோபால், சுப்ரியா சுலே, பவன் கெரா ஆகியோருக்கும் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. அவர்கள் (பாஜக) இளைஞர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். சிலர் மட்டுமே இதற்கு எதிராக போராடுகின்றனர். ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் பயப்படமாட்டோம். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ ஒட்டுக்கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை. வேண்டுமென்றால் என் போனைத் தருகிறேன். இது குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் வேலை’ என்று குற்றம் சாட்டினார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வந்த மின்னஞ்சல் நகல்களையும் அவர் செய்தியாளர்களிடம் காட்டினார்.
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமூல் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனை(உத்தவ் பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்பி ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்பி சசி தரூர், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் இன்று எச்சரிக்கை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ‘உங்கள் கைபேசி மீது தாக்குதல் நடக்கலாம், அதில் உள்ள தகவல்கள் திருடப்படலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.