பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீன மக்களுக்காக விருப்பு வெறுப்புகளை கடந்து, கட்சி வேறுபாடுகளை களைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒரே மேடையில் அணி திரண்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐ.நாவில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகும், பாலஸ்தீன் மீதான பதாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாததை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதுமட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஓரணியில் நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நாவின் போர் நிறுத்தத் தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கொடூரமான பாதிப்புக்குள்ளாகியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு உலக நாடுகள் உதவிட வேண்டும். இஸ்ரேல் ஆதரவு என்ற நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி மாற்றிக் கொள்வதுடன் ஐ.நா. மன்றத்தில் காந்தியடிகளின் வழிகாட்டல் படி சுதந்திர பாலஸ்தீனம் அமைய இந்திய உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து பாலஸ்தீனத்திற்கு மேலும் அதிகமான உதவிகளை அனுப்பிட ஒன்றிய அரசு உடனடியாக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ. எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மரு ரவீந்திரநாத், மதிமுகவின் செந்திலதிபன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் கே எம் அபுபக்கர். டான் பாஸ்கோ தொழில்நுட்ப பயிலகத்தின் இயக்குனர் அருத்தந்தை. வி சபாஸ்தியன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் உரையாற்றினர்.