சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: கபில் சிபல்!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டம் பாஜக அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிமன்றங்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-

பாஜக தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்குவதால் இன்னும் பல எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைப்பார்கள். சத்தீஸ்கரில் சிபு சோரன் மற்றும் பல அதிகாரிகளை டார்கெட் செய்தார்கள். மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைத்தனர். மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி டார்கெட் செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டம் பாஜக அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிமன்றங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.