2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் ஆனால் மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார் சுப்ரமணிய சுவாமி.
செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு சுப்ரமணிய சுவாமி அளித்துள்ள பேட்டியில் மோடி முன்பு போல் இப்போது இல்லை என்றும் அவர் ”கெட்டுப்போய்விட்டார்” எனவும் கூறியிருக்கிறார். அதேபோல் ”அமித்ஷாவெல்லாம் சும்மா” என்று குறிப்பிட்டு அந்தப் பேட்டியில் நக்கலாக சிரிக்கவும் செய்தார்.
மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடாது என்கிறீர்களே, சரி அவருக்கு பதில் வேறு யாரை முன்னிறுத்த விரும்புகிறீர்கள் என நெறியாளர் கேள்வி எழுப்பிய போது, பெயரெல்லாம் தன்னால் சொல்ல முடியாது என்றும் அவ்வாறு சொன்னால் ஏன் தன் பெயரை கூறவில்லை என பாஜகவில் உள்ள நண்பர்கள் தன்னை கேட்பார்கள் எனவும் கூறினார். இதனிடையே அமித்ஷாவை காட்டிலும் பிரதமராகும் தகுதி நிதின் கட்கரிக்கு உண்டு எனவும் சுப்ரமணிய சுவாமி சான்றிதழ் அளித்தார்.
மோடியை தாம் தான் கொண்டு வந்ததாகவும், அவருக்காக பிரச்சாரமெல்லாம் செய்ததாகவும், ஆனால் அவர் இப்போது கெட்டுப் போய்விட்டார் எனவும் சுப்ரமணிய சுவாமி கூறினார். தாம் சொல்வதை எதையும் பிரதமர் மோடி கேட்பது கிடையாது என்றும் பொருளாதார விவகாரத்திலாவது தனது ஆலோசனைகளை கேட்டிருக்கலாம் எனவும் மனம் நொந்து கொண்டார். நல்ல வேளை தன்னை மத்திய அமைச்சராக்கவில்லை ஒரு வேளை ஆக்கியிருந்தால் நான் சொல்வதை கேள் என்றும் என்னைவிட ஜூனியர் எனவும் மோடியிடம் கூறியிருப்பேன் எனவும் சுப்ரமணிய சுவாமி கூறியிருக்கிறார்.
உலகளவில் இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இதை எங்கே வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் விவாதம் நடத்த தாம் தயார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சூசகமாக சீண்டினார் சுப்ரமணிய சுவாமி. பாஜகவில் இருந்துக்கொண்டே பாஜக ஆட்சியையும், பிரதமரையும் இந்தளவுக்கு விமர்சிக்கும் ஒரே நபர் சுப்ரமணிய சுவாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.