மாநில உரிமைகள் குறித்த புரிதலை இந்திய அளவில் எடுத்துச்செல்ல வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:-
மாநில உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் இன்றைய சூழலில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்கு ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராததோடு மாநில நிர்வாகத்தையே முடக்கும் வகையில் கவர்னர் செயல்பட்டு வருவதால் இப்போது தமிழ்நாடு அரசு அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளை அதிகாரமற்றவையாக ஆக்குவதன்மூலம் ‘ஒரே நாடு ஒரே ஆட்சி’ என ஆக்குவதற்கு மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது.
இந்திய மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம்-11இல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டதற்கு மாறாக அப்போதிருந்த இந்திய மத்திய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. அதற்கு எதிரான குரல்கள் 1960-களிலேயே ஒலிக்கத் தொடங்கின. அதனால் மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை (1966) மத்திய அரசு அமைத்தது. அந்த ஆணையமும் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் செயல்பாட்டில் மன நிறைவு கொள்ளாத அன்றைய தமிழ்நாடு அரசு 1969 ஆம் ஆண்டு நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானம் இந்தியா முழுவதும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி அனந்தபூர் சாகிப் தீர்மானத்தை (1973) இயற்றவும்; மேற்குவங்கத்தை ஆட்சி செய்துவந்த இடதுசாரி அரசாங்கம் மத்திய மாநில உறவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடவும் (1977) அதுவே தூண்டுகோலாக அமைந்தது. அவற்றின் காரணமாக மத்திய – மாநில உறவுகளை ஆராய 1983 ஆம் ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையமும் 2007 ஆம் ஆண்டு நீதிபதி பூஞ்ச்சி ஆணையமும் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. அவற்றின் பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் உள்ளன.
தற்போதைய மத்திய பாஜக அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கை இதுவரை அமைதி காத்து வந்த மாநிலங்களிலும்கூட உரிமைக்கான வேட்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மாநில உரிமைகள் குறித்த புரிதலை இந்திய அளவில் எடுத்துச்செல்ல வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. மத்திய – மாநில உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் புதிய பரிமாணங்களை அடையாளம் காணவும், மாநிலங்களின் அதிகாரங்களை மீட்டெடுக்கவுமான பரிந்துரைகளைச் செய்வதற்கு 1969 இல் இராஜமன்னார் குழு அமைக்கப்பட்டதுபோல் தற்போதும் குழு ஒன்றை அமைத்திட தமிழக அரசு முன்வரவேண்டும் என முதல்-அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.