நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

பிரபல தமிழ் நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா. ரகு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். 1975ஆம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ’கோபுர வாசலிலே’, ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னத்தாயி’, ‘சங்கமம்’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அஜித் நடித்து வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், இறுதியாக 2021ல் வெளியான ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சினிமா தவிர்த்து ‘சித்தி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட சீரியல்களிலும் ஜூனியர் பாலையா நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று (நவ.02) அதிகாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் ஜூனியர் பாலையா மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். இன்று மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஜூனியர் பாலையா மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.