ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்த கேரளா அரசு!

ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கேரள அரசும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக தற்போது ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பெற்றதில் இருந்தே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது இல்லை என்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்படவிடாமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. தமிழக அரசு அனுப்பியுள்ள பல மசோதாக்கள் மாதக்கணக்கில் நிலுவையில் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த பேட்டி ஒன்றில், ‘நான் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கிறேன் என்று சொன்னால், அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம்’ என்று கூறியிருந்தார். குறிப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். பின்னர் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த மனு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகே குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் மசோதாவை அனுப்பி வைத்தார். இதைத்தவிர பல மசோதாக்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமண்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200 வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக மனு தாக்கல் செய்து இருக்கும் நிலையில், தற்போது கேரள அரசும் ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை எனக்கூறி கேரள ஆளுநருக்கு எதிராக ரிட் மனுவை அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள மனுவில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு ஆளுநர்கள் மூலமாக நெருக்கடி கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது ஆளுநருக்கு எதிராக அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.