தமிழகத்தின் நலனுக்காக, மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் சங்கரய்யா. சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் நலனுக்காக, மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் சங்கரய்யா. சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும். ஆளுநருக்கு அனுப்பபட்டிருக்கும் கோப்புகளை பற்றி எங்களுக்கு தெரியாது. எங்களுடைய நிலைப்பாடு, சங்கரய்யா அவர்களுக்கு நிச்சயமாக டாக்டர் கவுரவ பட்டம் கொடுக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்காதது ஏன் என ஆளுநர் மாளிகைதான் விளக்கமளிக்க வேண்டும். சங்கரய்யாவுடன் வேறு யாருக்காவது, பரிந்துரைத்து பட்டியல் அளிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.
நெல்லையில் நடந்திருப்பது மிகப்பெரிய கொடூரம். சாதி வன்கொடுமைகள் தமிழகத்தில் இன்னும் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கேயோ, ஏதோ ஒரு இடத்தில் ஒரு சமுதாயமாக நாம் தவறு செய்கின்றோமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. கல்வி ரீதியாக தவறு செய்கின்றோமோ, ஆரம்பக் கல்வியில் கோட்டை விடுகின்றோமோ, மாணவச் செல்வங்களுக்கு பள்ளிக்கூடத்தில் சாதி என்ற நச்சு விதை வளர்வதற்கு சில இடங்களில் நாமே காரணமாக இருக்கின்றோமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. மேலும் சாதியை வைத்து அரசியல் செய்கின்ற நிறைய கட்சிகள், அதை சாதிய சமுதாயத்திற்குள் புகுத்தி இருக்கின்றார்களா என்ற அச்சம் இருக்கிறது. வளராத மாநிலங்களில் இன்னும் சாதிக்கொடுமை எப்படி இருக்கிறது, அதேபோன்று தமிழகத்திலும் சாதிக் கொடுமை இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அனைவரும் சேர்ந்து சாதியை ஒழிக்க வேண்டும்.
மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை பொருத்தவரை, உரிய ஆவணங்களோடுதான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்தியா கூட்டணிக்கு எந்த ஒரு சிங்கிள் பாய்ண்ட் அஜெண்டாவும் கிடையாது. அப்படியே இருந்தால் அது மோடி எதிர்ப்புதான் . இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்பது உண்மை தான். அதோடு இந்தக் கூட்டணி நீடிக்கவும் வாய்ப்பில்லை.
யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன் என்று முதலிலேயே சொல்லியிருக்கிறேன். மக்களை மேம்படுத்துவதற்கு யார் வந்தாலும் வாங்க. நான் இதைப் பண்ண போறேன். இந்த மாதிரி பண்ன போறேன் என்று மக்களுக்கு ஒரு கொள்கையைக் கொடுங்க. மக்கள் தேர்வு செய்யட்டும். அரசியலுக்கு யாரும் வருவதற்கு யாருமே தடையாக இருக்கக் கூடாது. மக்களுக்கு சாய்ஸ் இருக்க வேண்டும். 3 கட்சி இருப்பதற்கு 6 கட்சி இருந்தால் இன்னும் சிறப்புதான். குறிப்பாக அதுவும் புதியவர்கள் அரசியலுக்கு வரும் போதுதான் சிஸ்டம் மாறும். பழையவர்களே 30 வருடம் 40 வருடம் இருக்கிறார்கள். அதனால்தான் நீரோடை போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். விஜய் உள்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும். அவர்கள் எல்லோரும் மாற்று அரசியலை முன்வைக்கட்டும். தமிழக மக்கள் யாரை முடிவு செய்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.