நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவினர் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் படிவத்தில் கையெழுத்து வாங்கி வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் படிவத்தில் கையெழுத்து வாங்கினார். மேலும் படிவத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ உள்ளிட்ட கட்சியினரும் கையெழுத்து போட்டனர்.
தொடர்ந்து வைகோ கூறுகையில், ‘‘நீட்டுக்கு எதிராக 50 லட்சம் பேரின் கையெழுத்து பெறும் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டுமிராண்டித்தமான கருத்துக்களை சொல்வதில், எல்லோரையும் மிஞ்சி விட்டார். ஆனால், அவருக்கு சரியான மூக்கணாங்கயிறு பூட்டுவதற்கும், அங்குசத்தை ஏவுவதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்’’ என்றார்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
நீட் விலக்கு நம் இலக்கு என்ற நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற்று இளைஞர் அணி மாநாட்டில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்க இருக்கிறோம். நீட் தேர்வு காரணமாக 6 ஆண்டுகளில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நீட்டால் அவர்களின் கனவு நசுக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேவை இல்லை. 12ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பை தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் 3 லட்சத்துக்கும் மேல் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுக உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெற வேண்டும் என்று நேரில் சந்தித்து அழைப்பு விட இருக்கிறேன். அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு உள்ளே நுழைந்தது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அதிமுகவிற்கு அந்த பெருமையை தந்து விடுகிறேன்.
சனாதனத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன். நான் பேசியதில் ஏதும் தவறு கிடையாது. நான் பேசியதை மாற்றிக்கொள்ள மாட்டேன். என்னுடைய கொள்கையை தான் நான் பேசி உள்ளேன். அம்பேத்கர், பெரியார் பேசியதை விட நான் பெரிதாக ஏதும் பேசவில்லை. அமைச்சர் பதவி இன்று வரும் நாளை போகும். சட்டமன்ற உறுப்பினர் பதவி இன்று வரும் நாளை போகும். இளைஞர் அணி செயலாளர் பதவி இன்று வரும் நாளை போகும். முதலில் மனிதனாக இருக்க வேண்டும். எனவே இந்த குற்றசாட்டை நான் சட்ட ரீதியாக சந்திக்கிறேன். முதல்வருக்கு இரண்டு நாள் காய்ச்சல் இருந்தது. இன்று முதல் அவர் அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.