ஜப்பான் படத்தில் எனக்கும் கார்த்திக்கும் பல சுவாரசியமான காட்சிகள் இருக்கின்றன: அனு இமானுவேல்!

ஜப்பான் படத்தில் எனக்கும் கார்த்திக்கும் பல சுவாரசியமான காட்சிகள் இருக்கின்றன. அது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று அனு இமானுவேல் கூறியுள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த நடிகை அனு இமானுவேல் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பின், சில படங்களில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து, ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நாயகியாகவும் நடித்திருந்தார். கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜிப்ஸி படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கிய படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு ஜப்பான் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவ.10 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகை அனு இமானுவேல் கூறியுள்ளதாவது:-

ஜப்பான் தனித்துவமான கதை. ராஜு மூருகன் பல திறமைகளை கொண்ட இயக்குநர். அவரது ஒவ்வொரு படமும் வித்தியாசமானது. ஜப்பான் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வித்தியாசமானவை. இதற்குமுன் இந்த மாதிரி ஒரு கதையை கேட்டதே இல்லை. ரசிகராக இந்தப் படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

கார்த்தி நல்ல மனிதர். படப்பிடிப்புக்கு முன்பாக அதிகம் கலந்தாலோசித்து பின்னர் நடித்தோம். இதற்குமுன் யாரும் இப்படியான படத்தினை பார்த்திருக்க முடியாது. தீபாவளிக்கு சரியான படம். திரையரங்கில் பார்க்க நல்ல அனுபவம் கிடைக்கும். ஜப்பானில் எனது கதாபாத்திரம் சுவாரசியமானது. நான் அதிகப்படியான தகவலை தர விரும்பவில்லை. ஜப்பான் (கார்த்தி) வாழ்க்கையில் நான் முக்கியமான பங்காற்றியிருக்கிறேன். எனக்கும் கார்த்திக்கும் பல சுவாரசியமான காட்சிகள் இருக்கின்றன. அது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.