தென்மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் சாதிய வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி நெல்லையில் இம்மாதம் 18-ம் தேதி பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தென்மாவட்டத்தில் 1990 முதல் 2010 வரையிலான காலத்தில் இருந்த சாதிய வன்முறை, மத நல்லிணக்கம் முயற்சியால் அமைதி ஏற்பட்டது. ஆனால், சில மாதமாக வன்முறை சம்பவங்கள் தலை தூக்கியுள்ளது. 3 மாதத்தில் மட்டும் தூத்துக்குடி, நெல்லை போன்ற இடங்களில் 30-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தென்மாவட்டங்களில் நடக்கும் வன்முறையை தடுக்க நவம்பர் 18-ல் நெல்லையில் மனித உரிமை மீட்பு, வன்கொடுமை தடுப்பு பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அரசியல் கட்சிகள் உட்பட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இதற்கு அழைப்பு விடுக்கப்படும்.
தமிழகத்தில் 2006 முதல் கனிமவளம் தொடர்ந்து கொள்ளை போகிறது. குறிப்பாக மதுரை, திருப்பத்தூர், சேலம் போன்ற பகுதியில் கிரானைட் கொள்ளை நடக்கிறது. ஏற்கெனவே, மேலூர் பகுதியில் பெயருக்கு கொஞ்சம் பட்டா இடத்தை குத்தகைக்கு எடுத்துவிட்டு, அருகிலுள்ள அரசு புறம்போக்கு இடம், கோயில் குளம், மலைப்பகுதிகள் சூறையாடப்பட்டன. மதுரை ஆட்சியராக இருந்த சகாயம் ரூ.1.50 லட்சம் கோடி கனிம கொள்ளை நடந்திருப்பதாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இது தொடர்பாக 21 நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனாலும், இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 2014-ல் எம்எல்ஏவாக இருந்தபோது, இரண்டு முறை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன். ஆனாலும், வழக்குகள் தொடர்ந்து நிலுவையிலுள்ளன.
இந்நிலையில், மீண்டும் கிரானைட் குவாரிகளுக்கு ஏலம் அறிவித்து இருப்பது ஏற்க முடியாது. அரசு இதை கைவிட வேண்டும். இனிமேல் எந்த அரசும் கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மத்திய அரசும் உதவக் கூடாது. தேவையெனில் நாங்கள் போராடவேண்டி வரும். தேர்தல் நிதி பெறும் உள்நோக்கமாக சந்தேகிக்கிறோம். தமிழ்நாட்டிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கிரானைட் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு கண்ட பிறகே அனுமதி பற்றி யோசிக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை இருந்தால் மட்டுமே பயம் இருக்கும். தவறு நடக்காது. டிசம்பர் 15-ல் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும். இடம் குறித்து பிறகு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.