பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று திருமணமான பின் பெண்கள் குளிர்காலத்தில் அடிக்கடி கணவருடன் நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது. பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும் என பேசி சர்ச்சையை கிளப்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்று அவர் சட்டசபையில் மன்னிப்பு கோரினார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். தற்போது பீகாரில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விபரத்தை தாக்கல் செய்த பிறகு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பேசினார். அப்போது அவர் மக்கள்தொகை கட்டுப்படுத்துவது குறித்து சில விஷயங்களை கூறினார். அதாவது ‛‛பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். தற்போது பீகார் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்து வருகிறது. பெண்கள் திருமணமாகி செல்லும்போது கணவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்க வேண்டி இருக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் அடிக்கடி நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது. ஆனால் பெண்கள் கல்வியறிவு பெற்று இருந்தால் அவருக்கு அனைத்தும் தெரியும். கணவர் நெருக்கமாக இருக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை அறிந்து கொண்டு இருப்பார். இதற்கு முன்பு பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 2.9 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதற்கு பெண்களின் கல்வியறிவு தான் காரணம்” என்றார்.
நிதிஷ் குமாரின் இந்த பேச்சை கேட்டு எம்எல்ஏக்கள் சிரித்தனர். அதேவேளையில் அவரது இத்தகைய கருத்து என்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பாஜக எம்எல்ஏக்கள், பெண்கள் அமைப்பினர் நிதிஷ் குமாருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் உடனே மன்னிப்பு கோர வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் தான் இன்று மீண்டும் பீகார் சட்டசபை கூடியது. இந்த வேளையில் நிதிஷ் குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். மேலும் மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நிதிஷ் குமார் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக அவர், ‛‛நான் பேசிய வார்த்தைகளை திரும்ப பெற்று கொள்கிறேன். ஏனென்றால் எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதோடு நான் பெண்களின் கல்வி குறித்து மட்டுமே பேசினேன். என் கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்றார்.