திருச்சியில் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘மெது வடை’யை கையில் எடுத்துக் காட்டி, இதுதான் ஸ்டாலின் சுட்ட வடை என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் பாதையாத்திரை மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், தொகுதிகளைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு பாதயாத்திரை மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் பேசினார் அண்ணாமலை. முன்னதாக, திருச்சியில் அண்ணாமலை பரோட்டா சுட்டதை பாஜகவினர் உற்சாகப்படுத்தினர். அண்ணாமலை நடைபயணம் சென்ற பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா போட்டுக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த அண்ணாமலை, அவரும் சென்று பரோட்டா போட்டார். இதை கண்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து, திருச்சியில் நடைபெற்ற பாதயாத்திரையைத் தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசினார் அண்ணாமலை. அப்போது அவர் பேசியதாவது:-
திருச்சி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு மத்திய பாஜக அரசு 4591 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு 951 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 1548 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 1151 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. 45,376 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலம் வீடு, 3,94,338 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,02,252 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,35,861 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 97,097 பேருக்கு , 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,47,248 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், திருச்சி மாவட்டத்திற்கு முத்ரா கடன் உதவி 8,018 கோடி ரூபாய். இவை திருச்சி மாவட்டத்துக்கு மத்திய அரசு செய்துள்ள நலத் திட்டங்கள்.
கடன் தொகையினை ஈடுகட்ட, நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில், அடமான சொத்தை ஐப்தி செய்ய சென்ற துணை வட்டாட்சியர் மீது, அமைச்சர் நேருவின் வலதுகரமான பகுதிச் செயலாளர் உள்ளிட்ட நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நேரு ஒருத்தர் தான் பணக்காரராக இருக்கணும் என்று இவரது சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி புலம்புகிறார். அரசு அதிகாரிகளுக்கு ஆபாச அர்ச்சனை, கட்சி தொண்டர்களை அடிப்பது என்று ரொம்ப பிஸியாக இருக்கிறார் குறுநில மன்னர் நேரு. இதற்கிடையில், துறை பணிகளை எப்படிக் கவனிப்பார்?
உதயநிதி ஸ்டாலின் ஒரு முட்டையை தூக்கிக்கொண்டு சுற்றுகிறார். ஐயோ ஆண்டவா இந்த நீட்டை எப்படியாவது தூக்கு, நான் வேற சொல்லி தொலைச்சிட்டேன் என முட்டை மந்திரவாதி போல திரிகிறார். கிராமப்புறங்களில் இருந்து நீட் தேர்வில் பாஸாகி செல்கிறார்கள். திருச்சி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஏராளமான வாக்குறுதி கொடுத்திருக்கிறார். திருச்சியில் ஆட்டோ நகர் அமைக்கப்படும் என்றார்கள். அது நேரு அண்ணனுக்கு கமிஷன் வந்த பிறகு தான் அமைப்பார். திருச்சி அருகே புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றார்கள். அதுவும் அமைக்கவில்லை. மலைக்கோட்டையில் பக்தர்களை அழைத்துச் செல்ல ரோப்கார் அமைக்கப்படும் என்றார்கள். உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே, எதற்கு இப்படியெல்லாம் வாக்குறுதி தரவேண்டும்? திருச்சியில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும் என்றார்கள். இவர்கள் மெட்ரோ கொண்டு வந்து முடிந்த மாதிரி தான். இவர்களால் இதை செய்யவே முடியாது. அதைக் கொண்டு வர திருச்சியில் பாஜக எம்.பியை கொடுங்கள். நான் சத்தியம் செய்கிறேன். மெட்ரோ ரயிலை நாங்கள் கொண்டு வருகிறோம்.
மாநில அரசின் நிதியில் திருச்சியில் உயர்தர பன்னோக்கு மருத்துவமனை அமைப்போம், அதுவும் 3 ஆண்டுகளில் செய்வோம் என்றார்கள். 30 மாதங்கள் முடிந்தும் செங்கலை கூட வைக்கவில்லை. ஆகையால், நம்முடைய மு.க.ஸ்டாலின் ஐயாவுக்கு இதனைக் காட்டுகிறேன். அவர் சுட்ட வடை. 511 வடைகளை சுட்டுக் கொடுத்துவிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளார் ஸ்டாலின். முட்டை மந்திரவாதி உதயநிதிக்கும் இந்த வடையை காட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.