தந்தை பெரியார் மண் இது. தந்தை பெரியார் மண்ணில் இப்படி பேசுவது எல்லாம் தவறு. எனவே பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசுக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று ஒரு அறிவிப்பு வெளியிட வேண்டும். விரைவில் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிவித்து வருகிறார்கள். பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று அறிவித்து அதனை எடுத்து முடித்து நேற்று முன்தினம் 50 சதவீதம் இருந்த இடஒதுக்கீடை 65 சதவீதமாக அறிவித்தது. EWS 10 சதவீதம் என மொத்தம் 75 சதவீத இடஒதுக்கீடு பீகாரில் வரப்போகிறது. எனவே நீங்கள் சமூக நீதி பேசுகிறோம் என்று பேசினால் மட்டும் போதாது. உங்களுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மனமில்லை என்றால் சமூக நீதி பற்றி பேசாதீர்கள். சமூக நீதி மாநாடு நடத்தாதீர்கள். இது அவசியமானது. இதனை நிச்சயமாக செயல்படுத்த வேண்டும். இதை செயல்படுத்தவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் போராட்டம் நடத்தும்.
தமிழகத்தில் சந்து சந்தாக கடைகள் இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக தமிழகத்தில் மதுக்கடைகள் 5 ஆயிரம் தான் இருக்கிறது. ஆனால் இந்த சந்துக்கடை 25 ஆயிரம் கடைகள் இருக்கிறது. அதிக சந்துக்கடைகள் தருமபுரியில் தான் இருக்கிறது. இப்படி இருக்கிற சூழலில் 10 வயது, 13 வயது பிள்ளைகள் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு பக்கம் மது மறுபக்கம் போதைப்பொருள். ஒரு தலைமுறையையே நாசப்படுத்திவிட்டார்கள். அதனால் போதை ஒழிப்பு பிரிவுக்கு கூடுதலாக 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் காவலர்களை நியமனம் செய்ய வேண்டும்.
தந்தை பெரியார் மண் இது. தந்தை பெரியார் மண்ணில் இப்படி பேசுவது எல்லாம் தவறு. எனவே பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசுக்கூடாது. இது எங்களுடைய பாமகவின் முன்னோடிகளாக 3 பேரை வைத்துள்ளோம். ஒன்று தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மற்றும் கார்ல் மார்க்ஸ். ஆகிய 3 பேரை பற்றி தவறாக பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எதிர்க்கட்சிகளை குறிவைத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் நேர்மையாக நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க இப்படி நடக்கிறது. மக்களுக்கு இது போன்ற வருமான வரி, அமலாக்கத்துறை மீது நம்பிக்கை வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.