டிடி பொதிகை சேனல், வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் ‘டிடி தமிழ்’ என பெயர் மாற்றம்!

டிடி பொதிகை சேனல், வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் ‘டிடி தமிழ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகை தகவல் பணியகத்தின் புதிய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பின்னர் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாள் முதல் ‘டிடி பொதிகை’ தொலைக்காட்சி சேனலின் பெயர் ‘டிடி தமிழ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. அரசியல் விவாதம் உள்ளிட்ட பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படத் தொடங்கியுள்ளது. கர்நாடகா மாநில பாஜக தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமனம் முன்பு அனைவரும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் டிடி தொலைக்காட்சியில், ஒலியும் ஒளியும் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறோம். மேலும், டிடி நிருபர்கள் அடுத்ததாக களத்தில் இறங்கி செய்தி சேகரிக்க உள்ளனர். நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறீர்கள் என முதல்வரிடம் டிடி நிருபர்கள் கேள்வி கேட்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்சன் பல்வேறு மொழிகளிலும் தனித்தனி சேனல்களை அறிமுகப்படுத்தியது. அந்தவகையில், சென்னை மண்டலத்தில் தமிழ் மொழி நிகழ்ச்சிகளுக்காக 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி “டிடி-5” என்ற தொலைக்காட்சி சேனலை நிறுவியது. இதன் சேவைகள் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒளிபரப்பாகிறது. பின்னர், சேனல் பெயரில் உள்ள எண்களுக்கு மாறாக உள்ளூர் பெயர்களை வைக்க தூர்தர்சன் முடிவெடுத்தது. அதன்படி, தொலைக்காட்சி நேயர்களிடமிருந்தே பொருத்தமான பெயர் ஒன்றை பரிந்துரைக்க கோரப்பட்டது. அதன் அடிப்படையில் ‘பொதிகை’ என்ற பெயர் சூட்டப்பட்டது. தமிழ் மொழி பிறந்ததாகக் கருதப்படும் பொதிகை மலையை குறிப்பிடும் வகையில் “டிடி பொதிகை” என பெயர் வைக்கப்பட்டது.

தமிழ் இலக்கணத்தை உருவாக்கிய அகத்திய முனிவருக்கு, சிவபெருமானும், முருகனும் தமிழ் கற்பித்த இடமாக பொதிகை மலை கருதப்படுகிறது. அதை உணர்த்தும் வகையில், தூர்தர்ஷனின் தமிழ் மொழி சேனலுக்கு டிடி பொதிகை என பெயர் சூட்டப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் டிடி பொதிகை என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் “டிடி பொதிகை” சேனல் ‘டிடி தமிழ்’ என அழைக்கப்படும் எனக் கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். இதன் மூலம், 24 ஆண்டுகால “பொதிகை” பயணம் முடிவுக்கு வரவுள்ளது.