இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஜெய்சங்கர்

லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் | படம்: எக்ஸ்
லண்டன்: இந்தியா இன்று மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயணன் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெய்சங்கர், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் மதிப்பு நாம் தினந்தோறும் செய்யும் செயல்களில் இருந்தே வெளிப்படுகிறது. பிரதமர் மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது இந்திய நாட்டின் மீதான நன்றியுணர்வை வெளிப்படுத்த ஒருபோதும் தவறியதில்லை. பிரதமர் மோடியின் அரசாங்கம் 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் மிக மோசமான சூழலுக்கு இடையே ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தினோம். இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு நல்ல தலைமையும், லட்சியமும், நல்ல அரசாங்கமும் உள்ளது” என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் ஒரு நீண்ட சந்திப்பை முடித்து விட்டு இங்கு வந்திருக்கிறேன். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான உறவுகளைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. பாரதத்தின் மீதான பார்வை எவ்வளவு மாறிவிட்டது என்பதை நான் தற்போது காண்கிறேன்” இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

முன்னதாக டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்தில், ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி இருவரையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அவர்கள் இருவருக்கும், சிறிய விநாயகர் சிலை ஒன்றையும், விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றையும் ஜெய்சங்கர் பரிசளித்தார்.