தீபாவளி பண்டிகைக்கு பதிலடியாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நரகாசூரன் வீரவணக்க நிகழ்வை நடத்தினர். இந்த நிகழ்வில் திராவிடர் விருந்து என்ற பெயரில் மாட்டிறைச்சி, பன்றிறைச்சி விருந்து வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. நரகாசூரன் அழிக்கப்பட்ட நாள் தீபாவளி என்பது பொதுநம்பிக்கை. இதனை பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பொதுமக்கள் கொண்டாடினர். அதேநேரத்தில் தீபாவளி பண்டிகை தொடர்பான மாறுபட்ட கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. தீபாவளிக்கு எதிராக நீண்டகாலமாக திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்து வருகிறது. இன்றைக்கும் திராவிடர் இயக்கத்தினர் தீபாவளிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். திமுக தலைவர்கள் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துகளை சொல்வது இல்லை. தீபாவளி பண்டிகை என்பது தேவர்கள் Vs அசுரர்கள் போராட்டம் என்கிறது; இது ஆரியர் vs திராவிடர் போராட்டம்; திராவிடர்களாகிய நம்மை நமது “திராவிடப் பேரரசன்” நரகாசூரன் அல்லது நரகாசுரன் வீழ்த்தப்பட்ட நாளை நாமே கொண்டாடுவது என்பது ஏற்புடையது அல்ல என்கிறது திராவிடர் இயக்கம். இதனால் தீபாவளி நாளில் “நரகாசூரன் வீரவணக்க நிகழ்வு” நிகழ்ச்சிகளை திராவிடர் இயக்கத்தினர், பெரியார் கொள்கையாளர்கள் நடத்துகின்றனர்.
கோவையில் நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் கோவை பெரியார் படிப்பகத்தில் நரகாசூரன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வில் திராவிடர் விருந்தாக மாட்டிறைச்சி, பன்றிறைச்சி உணவு விருந்து வழங்கப்பட்டது. இதேபோல திராவிடர் தளம் “நரகாசுரன் வீரவணக்கநாள் – தீபாவளி புறக்கணிப்பு ஒன்றுகூடல் நிகழ்வு திருப்பூர் Casteless பால் பண்ணையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீபாவளியைப் புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மாட்டுக்கறி, பன்றிக்கறியோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.