நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது; சமூகநீதிக்கு எதிரானது: வைரமுத்து

நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது; சமூகநீதிக்கு எதிரானது; மாணவர்களுக்கு எதிரானது என எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து கையெழுத்திட்டார். நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது; சமூகநீதிக்கு எதிரானது; மாணவர்களுக்கு எதிரானது என கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக எனது கையெழுத்தும் இடம் பெறுவதில் மகிழ்ச்சி என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

‘நீட் விலக்கு நம் இலக்கு’
இயக்கத்தில் நானும்
கையொப்பமிட்டேன்.

“நீட் என்பது
கல்விபேதமுள்ள தேசத்தில்
ஒரு சமூக அநீதி என்றேன்.

நீட்தேர்வு
மருத்துவத்தில்
சேர்த்துவிடுவதற்கு மாறாகச்
சிலரை
மரணத்தில் சேர்த்துவிடுவதை
அனுமதிக்க முடியாது என்றேன்

நீட் விலக்கு மசோதாவில்
குடியரசுத் தலைவர்
கையொப்பமிட வேண்டும் மற்றும்
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு
மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.