மேட்டூர் அணையில் இருந்து மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது மேட்டூர் அணை. சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ, பின்னரோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நடப்பாண்டு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாகவே மே 24-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து மேட்டூருக்கு சென்று இரவு தங்கினார். நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காலை 11.15 மணிக்கு அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசை பட்டனை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அணையின் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் மு.க.ஸ்டாலின் மலர்களையும், நெல் உள்ளிட்ட தானியங்களையும் தூவினார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரும் தண்ணீரில் மலர்களை தூவி வணங்கினர்.

அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டிருந்த டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து 2-வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 508 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 117.76 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று இரவு 8.30 மணி அளவில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஜூன் மாதம் இறுதி வரை வழங்கப்படும் எனவும், ஜூலை மாதத்தில் வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், ஆகஸ்டு மாதத்தில் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாகவும் தேவைக்கேற்ப திறந்து விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர் ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறுவை பாசனத்துக்கு ஜூன் 12-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை 125 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மேட்டூர் அணையில் இருந்து 99.74 டி.எம்.சி. தண்ணீரும், மீதமுள்ள 25.26 டி.எம்.சி. தண்ணீர் மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு குறித்த காலமான ஜூன் 12-ந் தேதி அன்று 18 ஆண்டுகளும், ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவே 10 ஆண்டுகளும், காலதாமதமாக 60 ஆண்டுகளும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 1947-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் டெல்டா பாசனத்திற்கு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே நேற்று அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கடைமடை வரை செல்லும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே நீர் ஆதாரங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.