குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒரு நாள் முழுவதும் வீட்டினுள் பதுங்கியிருந்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவில் வீட்டிலிருந்து சிறுத்தை வெளியேறியதாக வனத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேண்ட் பகுதியில் பொதுமக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது சிறுத்தை ஒன்று நாயை பிடிப்பதற்காக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அந்த நேரத்தில் திடீரென பட்டாசு வெடி சப்தம் கேட்டதால் அலறிய சிறுத்தை வீடு ஒன்றுக்குள் புகுந்து கொண்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டுக்குள் நுழைந்து பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த முயற்சியில் 6 வனத்துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிசிடி கேமராக்கள் மூலம் சிறுத்தையை கண்காணிக்க தொடங்கிய வனத்துறை அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர்.
சுமார் 18 மணிநேரமாகியும் சிறுத்தை வெளியே வராததால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் வனத்துறையினர் தயாராக இருந்தனர். மேலும் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சிறுத்தையின் நடமாட்டத்தையும் வனத்துறையினர் கண்காணித்தனர். அப்போது நேற்று இரவு திடீரென வீட்டில் இருந்து சிறுத்தை மெல்ல வெளியே தலைகாட்டி வெளியேறியது. இதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய சிறுத்தை வனப்பகுதிக்குள் நுழைந்தது. இந்த வீடியோ காட்சிகளை வனத்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறுகையில், புரூக்லேண்ட் வனப்பகுதியில் நடமாடிய சிறுத்தை அதிகாலையில் சிறுத்தை நாயை விரட்டியபடி வீடு ஒன்றுக்குள் நுழநிதது. இந்த தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு சென்று சிறுத்தையை வெளியேற்ற அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால் சிறுத்தை மூர்க்கமாக தாக்கியதில் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இதனால் அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்த வீடு கண்காணிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சிறுத்தை வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தது. பட்டாசு சப்தங்கள் ஓய்ந்த நிலையில் நேற்று இரவு சிறுத்தை தானாகவே வெளியேறியது என்றார்.