9 மைத்தேயி இனக்குழு அமைப்புகளுக்கு 5 ஆண்டு மத்திய அரசு தடை!

மணிப்பூரில் வன்முறைகள் நீடித்து வரும் நிலையில் 9 மைத்தேயி இனக்குழு அமைப்புகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிரடியாக 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களாக மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையே தொடர் மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறைகளில் குக்கி இன மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மோதல்களில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து அகதிகளாக முகாம்களில் தங்கி உள்ளனர். ஆனாலும் மத்திய அரசு மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசும் மறுத்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற மிசோரம் சட்டசபை தேர்தலிலும் மணிப்பூர் வன்முறை முக்கிய பிரச்சனையாக இடம் பிடித்தது. மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசு மீது மிசோரம் மக்கள் அதிருப்தியில் இருப்பதால் ஆளும் மிசோ தேசிய முன்னணி பாஜகவிடம் இருந்து விலகி நின்றது; மேலும் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்யவும் மறுத்தார் முதல்வர் ஜோரம் தங்கா. இதனால் மிசோரம் சட்டசபை தேர்தலில் மோடி பிரசாரமும் செய்யவில்லை. மிசோரம் பூர்வ குடி மக்களும் மணிப்பூர் குக்கி இனமக்களும் தொப்புள் கொடி உறவுகள் என்பதால் மிசோரமில் மணிப்பூர் வன்முறை தாக்கம் இருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மணிப்பூரில் மைத்தேயி இனக்குழுக்களின் 9 அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்து 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மத்திய அரசு. மக்கள் விடுதலை ராணுவம் (PLA) புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய விடுதலை முன்னனி (UNLF) மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA) காங்லீய்பக் மக்கள் புரட்சிகர கட்சி (PREPAK) காங்லீய்பக் கம்யூனிஸ்ட் கட்சி (KCP) கே.ஒய்.கே.எல். கோர்கோம் ஏ.எஸ்.யூ.கே ஆகிய 9 அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.