அதிகளவில் பீர் குடித்ததால் நடிகர் கலாபவன் மணி மரணம்!

நாளொன்றுக்கு 13 முதல் 16 பாட்டில் வரை பீர் குடித்ததால் கலாபவன் மணியின் கல்லீரல் செயலிழந்து இருக்கிறது. இதுவே அவரது மரணத்திற்கு காரணம் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னிசேரியில் பிறந்தவர் ராமன் மணி. சிறு வயதில் இருந்தே நடிப்பு, நடனம், மிமிக்ரி மீது பேரார்வம் கொண்டிருந்த அவரது கனவுகள், சாதிய பாகுபாட்டால் சிதைந்து போயின. அவர் மேடை ஏறி நடிக்கும் நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த போதிலும், அவரது சாதியை காரணமாக காட்டி, அவரை மேடை ஏற விடாமல் சில சாதி வெறியர்கள் தடுத்தனர். ஆனாலும், மனம் தளராமல் ‘கலாபவன்’ என்கிற கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பை கற்றுத் தேர்ந்தார் ராமன் மணி. பின்னர் அவரது நடிப்பு திறமையை கண்டு வியந்த கேரள திரையுலகம் அவருக்கு வாய்ப்பளித்தது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பிய்த்து உதறும் ராமன் மணி, ரசிகர்களின் மனம் கவர்ந்த கலாபவன் மணியாக மாறினார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடா என பல மொழி திரைப்படங்களிலும் தனது ஆழமான தடத்தை பதித்தார் கலாபவன் மணி.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி தனது பண்ணை வீட்டில் நண்பர்ககளுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார் கலாபவன் மணி. உடற்கூறாய்வில் அவரது உடலில் சில நச்சு ரசாயனங்கள் கலந்திருப்பது தெரியவந்தது. இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், சந்தேகம் தீராததால் ஐபிஎஸ் அதிகாரி உன்னி ராஜன் தலைமையில் கலாபவன் மணியின் மரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் குழு தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கலாபவன் மணி மதுவுக்கு, குறிப்பாக பீருக்கு மிகவும் அடிமையாகி இருக்கிறார். தினமும் 12 முதல் 13 பாட்டில் பீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதனால் அவரது கல்லீரல் செயலிழந்து இருக்கிறது. இதன் அறிகுறியாக அவருக்கு ரத்த வாந்தியும் வந்திருக்கிறது. ஆனாலும் பாட்டில் பாட்டிலாக பீர் குடிப்பதை கலாபவன் மணி நிறுத்தவில்லை. ஒருகட்டத்தில் அவரது கல்லீரல் மிகவும் கெட்டுப் போனதால், மதுவில் இருக்கும் எத்தனாலை அவரது ரத்தத்தில் இருந்து பிரிக்க முடியாமல் போனது. இதனால்தான் அவரது ரத்தத்தில் எத்தனால் கலந்து கலாபவன் மணி உயிரிழந்து இருக்கிறார். மரணத்தை தானே தேடிச் சென்று அதில் விழுந்திருக்கிறார் கலாபவன் மணி. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.