கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு காட்டு காட்ட தொடங்கிவிட்டது. தற்போதைய சூழலில் இரண்டு இடங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அவை தெற்கு அந்தமான் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி. அடுத்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தீபாவளி விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால் மழை காரணமாக அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
நேற்று மாலை முதலே விடுமுறை கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. எந்தெந்த மாவட்டங்கள் என்று மாணவர்கள் மத்தியில் ஆர்வம் தொற்றிக் கொண்டது. தற்போது வரை நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 14) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.