காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியப்பிரதேச மாநில மக்களின் குரல்வளையை பாஜக தலைவர்கள் நசுக்கிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எம்.பி.ராகுல் காந்தி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பாஜக அபகரித்து விட்டதாக குற்றம்சாட்டினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் அமைந்த காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்ந்ததை சுட்டிக்காட்டி ராகுல் பேசினார்.
சத்திஸ்கரில் ஒரு குவிண்டால் நெல்லை ரூ.2500-க்கு அரசு கொள்முதல் செய்யும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தும் ஒரு குவிண்டால் நெல்லை ரூ.2000-க்கு அரசு கொள்முதல் செய்கிறது. விவசாயக் கடன்களையும் காங்கிரஸ் ஆட்சி ரத்து செய்துவிட்டதாக ம.பி.யில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஒரு குவிண்டால் நெல் ரூ.3200-க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மத்தியபிரதேசத்தில் 145 முதல் 150 இடங்கள் வரை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தான் மாநில மக்கள் தேர்வு செய்ததாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி, சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் சேர்ந்து, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கைப்பற்றியதாக விமர்சித்துள்ளார்.
கோடி கணக்கில் பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, மக்களின் குரல்வளையை பாஜக தலைவர்கள் நசுக்கிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா, ஹிமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி கட்டிலில் இருந்து பாஜகவை அகற்றியது போல் மத்திய பிரதேசத்திலும், காங்கிரஸ் செய்துகாட்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.