உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் மும்பையில் இன்று நடைபெற உள்ளது. இந்தியா- நியூசிலாந்து இடையே நடைபெறும் அரையிறுதி போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 13-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கி இந்த தொடரில் உலகின் முன்னணியான 10 நாடுகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து முடிந்தது. இதில் எந்தபோட்டியிலும் தோற்காமல் 9 ஆட்டங்களிலும் வென்று இந்தியா 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதேபோல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
தகுதி சுற்று போட்டிகள் முடிந்த நிலையில், இன்ற பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரைஇறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் தகுதி சுற்றில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி, நடையை கட்ட வேண்டியதுதான். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ளள இந்தியா 8-வது முறையாக அரைஇறுதியில் விளையாடுகிறது. 4-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது. இதுவரை 3 முறை இந்தியா இறுதி போட்டிக்கு சென்ற நிலையில், 1983, 2011ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றது. ஆனால் 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. எனவே இந்த முறை நியூசிலாந்தை வென்று முன்னேறும் வேட்கையில் இந்தியா உள்ளது.
கடந்த உலகக் கோப்பை அரைஇறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்னில் இந்திய அணி தோற்று வெளியேறி நிலையில், அதற்கு இன்று இந்தியா பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 22-ந்தேதி தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்திசாயத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி உள்ளதால் இந்தியா பெரும் நம்பிக்கையில் உள்ளது. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் இந்தியாவை அரையிறுதியில் இன்று எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். இந்த போட்டியை காண பலரும் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்நிலையில் கிரிக்கெட் பிரியரான ரஜினிகாந்த், இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டத்தை காண மும்பை வந்துள்ளார். அவருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஏற்கனே ரஜினிக்கு பிசிசிஐ சார்பில் பாகிஸ்தான் போட்டியை காண சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியை கண்டு ரசிக்க ரஜினி ஆர்வமாக உள்ளார்.