சத்துணவில் அழுகிய முட்டை குறித்து கீதா ஜீவன் பதில் நல்ல காமெடி: அண்ணாமலை

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு முட்டைகள் அழுகியிருந்ததாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். மழையால் முட்டை மீது வைக்கப்பட்டிருந்த கறுப்பு மை ஊறி முட்டைக்குள் இறங்கி விட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளிக்கவே அதனை நல்ல காமெடி என்று பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக மாணவ மாணவியருக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்கள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தாலும், தவறு செய்தவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. குறைந்தபட்சம், முட்டை வழங்கும் நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பதிவிட்டிருந்தார் அண்ணாமலை.

அண்ணாமலையின் புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும் போது பதில் அளித்தார் அமைச்சர் கீதா ஜீவன். ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு முட்டைகள் அழுகியிருந்ததாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். சத்துணவில் வாரத்தில் 3 நாட்கள் முட்டை விநியோகம் செய்யப்படுகிறது. பழைய முட்டைகளை பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, மூன்று நாட்களும் முட்டையில் தனித்தனி கலர் அடையாளம் வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அன்றைய தினம் முட்டையில் கருப்பு கலர் இருந்தது. குறிப்பிட்ட நாளில் அங்கு பலத்தமழை பெய்ததால் முட்டைகள் நனைந்து, கருப்பு மை ஊறி முட்டைக்கு உள்ளே கருப்பு கலர் இறங்கியுள்ளது. இது உணவு பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது என்று கூறினார். சிலர் அரசு மீது எப்போது குறை கண்டுபிடிக்கலாம்? என்ற நோக்கத்தில் இதை பூதாகரமாக்க முயன்றனர். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. மாணவர்களுக்கு நல்ல தரமான முட்டைகள்தான் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார் அமைச்சர் கீதா ஜீவன்.

அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பள்ளிக் குழந்தைகளுக்கு அழுகிய காலாவதியான முட்டைகள் வழங்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சர் டிஎம்டி கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த முட்டைகள் ஏன் மாசுபட்டன என்பதற்கான காரணம் நகைச்சுவைத் திரைப்படத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டது போல இருக்கிறது. அவர் சொல்லும் பதிலில் லாஜிக் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.