ஆளுநர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, திருப்பி அனுப்பும் ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீண்ட நாட்களாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது கவலைக்குரியது என கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமையன்று சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி இந்த சட்டமசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வளவு காலதாமதம் செய்து மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவையில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக இயற்றி, ஆளுநர் அவர்களுக்கு அனுப்பிய 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, இன்று 16.11.2023 அந்த மசோதாக்களை தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த செயல் உள்நோக்கம் கொண்டது. ஆளுநருக்கு எங்களது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். சட்ட மசோதாக்கள் மேல் விளக்கம் கேட்பதாக இருந்தால் அவர் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள அவசியமில்லை. ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது என்பது, அதை நிராகரிப்பது என்றுதான் அர்த்தம் என்று சிறுபிள்ளைத்தனமாக பேசியது பலரது கண்டனத்திற்கு உள்ளானது.

ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றதில் இருந்து பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மக்கள் நல செயல்பாடுகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம் அரசியல் சட்டங்களை ஆராய்ந்து, ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் பற்றி தெளிவாக கூறியிருந்த பின்பும், அதையெல்லாம் மீறி தான்தோன்றித்தனமாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் துளியும் அக்கறையில்லாத ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். இல்லையென்றால், மத்திய அரசு ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.