ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களின் சொத்து மதிப்பு பட்டியலை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை தாக்கல் செய்தனர்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி எச்.ஏ.மோகன் முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏலம் விட வேண்டிய சொத்துக்களின் விபரங்கள் மற்றும் அதனுடைய தற்போதைய மதிப்பு ஆகியவற்றின் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று காலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சார்பில் துணை கண்காணிப்பாளர் புகழ்வேந்தன் ஆஜரானார். அப்போது பினாமி பெயரில் செயல்பட்ட லெக்ஸ் ப்ராப்பர்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடேட், சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடேட், மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடேட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடேட், ரிவர் வே அக்ரோ பிரைவேட் லிமிடேட், இந்தோ டோதா கெமிக்கல் ஆகிய 6 நிறுவனங்களின் சொத்து பட்டியலை நீதிமன்றத்தில் சமர்பித்தார். அந்த சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்புகளுடன் இருந்தது.
பின்னர் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், ‘பினாமி பெயரில் இயங்கி வந்த ரிவர் வே அக்ரோ பிரைவேட் லிமிடேட் நிறுவனத்திற்கு 1200 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 300 ஏக்கர் நிலம் மட்டும் 2 பேரின் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளது. இதனால் அதனை பறிமுதல் செய்வதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும். மீதமுள்ள அனைத்து சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று கூறினர்.