செந்தில் பாலாஜிக்கு இன்றைய தினம் முக்கிய பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றைய தினம் முக்கிய பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டது. அதாவது முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் நெஞ்சுவலிப்பதாக கூறிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியது. அதோடு செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஜாமீன் கோரி வரும் நிலையில் நீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வருகிறது. அதோடு அவரது நீதிமன்ற காவல் 10வது முறையாக வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையிலேயே இருக்கிறார்.

இதற்கிடையே தான் நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தார். அதன்பிறகு வீல்சேரில் செந்தில் பாலாஜி அமர வைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்கோ உள்பட இதயம் சார்ந்த பல மருத்துவ பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அதோடு கழுத்து வலிக்கும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இதயவியல் பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள். பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக கால் நரம்பு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு கால் மரத்து போவதாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜிக்கு சிடி ஸ்கேன் எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே தான் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது செந்தில் பாலாஜிக்கு இன்னும் சில பரிசோதனைகள் பாக்கி உள்ளதாகவும், இன்று எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.