அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அவருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, உடல்நிலை சீரான பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று முன் தினம் மதிய உணவு உட்கொண்டது முதலே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது கால் மரத்து போவதாக கூறிய நிலையில் இதயவியல் துறை பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் சாப்பிட்டவுடன் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவரது உடலை குடலியல் சிகிச்சை நிபுணர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு பித்தப்பையில் கற்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படுகிறது. நேற்றைய தினம் அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் குறையாமல் அதிகரித்த நிலையிலேயே இருக்கிறது. இதனால் அதை குறைக்க சிகிச்சைகள் அளிக்கப்படும் என தெரிகிறது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படவுள்ள நிலையில் அதன் முடிவுகளை பொறுத்தே செந்தில் பாலாஜி எப்போது சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-
பரிசோதனைகள் செய்துகொண்டிருக்கிறார்கள். அவருக்கு ஏற்கனவே ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டிருந்தது. அதில், தூக்கமின்மை, அதாவது ஆபரேஷனுக்கு அப்புறமாக ஏற்படுகிற சிறிய அளவிலான பாதிப்புகள் சம்பந்தமாக பார்ப்பதற்கு நேற்று ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார். எங்கே ஆபரேஷன் செய்தார்களோ அங்கே பரிசோதனைகள் தொடர்வதற்காக வந்திருக்கிறார். பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் என்ன மாதிரியான நோய் பாதிப்புகள் இருக்கிறது. அதற்கு என்ன மாதிரியான மருத்துவ சிகிச்சை என்று அறிவிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.