அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு: அமைச்சர் பொன்முடி விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் செமஸ்டர் தேர்வு கட்டணம் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மாணவ-மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு தாளுக்குத் தேர்வுக் கட்டணம் 150 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு 300 ரூபாய் தேர்வுக் கட்டணம் இருந்த நிலையில் தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்புக்குத் தேர்வுக் கட்டணம் 600 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித்தலைவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

செமஸ்டர் ஒன்றுக்கு 9 தாள்கள் எழுத வேண்டியிருக்கும் நிலையில் ஏற்கனவே கட்டி வந்த தேர்வுக் கட்டணத்தை விட தற்போது கூடுதலாக 2,000 ரூபாய் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தேர்வுக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பொன்முடி, ‘இந்த செமஸ்டர் தேர்வில் இந்த கட்டண உயர்வு இருக்காது. பழைய கட்டணமே இருக்கும்’ என்று கூறினார்.