விவசாய நிலங்களுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் குண்டர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து நாளை திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் ‘சிப்காட் 3-வது அலகு விரிவாக்கம்’ செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. அரசை பொறுத்தவரையில் இந்த நிலம் தரிசு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு நெல், மணிலா, கரும்பு, கேழ்வரகு, பூக்கள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அரிசி திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்துதான் வருகிறது. அரசு சொல்வதை போல இது தரிசு நிலம் கிடையாது என்றும், இது வேளாண் நிலம் என்று கூறி திருவண்ணாமலை மக்கள் ‘மேல்மா சிப்காட்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக 72 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும் விவசாயிகள் 125 நாட்கள் கடந்தும் தற்போது வரை போராட்டத்தை நடத்தி வந்திருந்தனர். இப்படி இருக்கையில் 126வது நாளாக கடந்த நவம்பர் 4ம் தேதியன்று இவர்கள் பேரணி நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் என 7 பேர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்புகள் மேலெழுந்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து நாளை திருவண்ணாமலையில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் பதிவில், “திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய தினம் (18/11/2023) பாஜக சார்பாக, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா நகரிலிருந்து பேருந்து நிலையம் வரை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திராவிட மாடல் அரசால் தமிழகம் வளர்ந்துள்ளதாக அக்கட்சியினர் கூறுவது முற்றிலும் பொய். பெரம்பலூர் மாவட்டம் இன்னும் பின்தங்கியே உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூரில் பொருளாதார மண்டலம் அமைக்க திமுக அரசு 3,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. ஆனால் இதுவரை அங்கு ஒரு செங்கல்லை கூட நடவில்லை. எனவே, இப்பகுதி வளர வேண்டும் எனில் வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும் என்றார்.
பின்னர், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை, காமராஜர் வளைவு பகுதியில் நிறைவு செய்தார். அங்கு அவர் பேசுகையில், திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இங்குள்ள திமுகவினரில் கொள்ளையடிப் பதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை. பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி ஏலம் எடுக்கச் சென்ற பாஜக நிர்வாகிகளை தாக்கிய அமைச்சர் சிவசங்கர் ஆதரவாளர்களை பாஜக விடப்போவதில்லை. உப்புத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். உங்கள் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர் பிரதமர் மோடி. 11-வது இடத்திலிருந்த நாட்டின் பொருளாதாரத்தை 5-வது இடத்துக்கு முன்னேற்றியவர் மோடி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கரத்தை வலுப்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.