உண்மையில் கல்லக்குடி கொண்டான் கவியரசு கண்ணதாசன் தான். கல்லக்குடி என்றால் கருணாநிதி என்ற பொய் பிம்பத்தைக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள் திமுகவினர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் கல்லக்குடியில் நடைபெற்ற நடைபயணத்தின்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை திமுகவின் அரசியல் எழுச்சியில் முக்கியப் பங்கு வகித்த கல்லக்குடி போராட்டம் பற்றிப் பேசினார். அவர் கூறியதாவது:-
கல்லக்குடி கொண்ட கருணாநிதி என்று, கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சாதனை என்று திமுகவினர் பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், கல்லக்குடி போராட்டத்தில் நடந்த உண்மை வேறு. 1953 ஜூலை மாதத்தில் வராத ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்தார் கருணாநிதி. அன்றே ஏமாற்ற ஆரம்பித்து விட்டார்கள். 70 ஆண்டுகளாக ஏமாற்றுகிறார்கள். டால்மியாபுரம் ரயில் நிலையம் எனும் பெயர்ப் பலகையின் மீது, கல்லக்குடி ரயில் நிலையம் என்ற போஸ்டரை ஒட்டுவதுதான் அன்றைய திமுக தலைவர் அண்ணா அவர்களின் போராட்ட அறிவிப்பு. திமுகவினர் 3 குழுக்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருணாநிதி தலைமையில் ஒன்று, காரைக்குடி ராம.சுப்பையா தலைமையில் ஒரு குழு, கவிஞர் கண்ணதாசன் தலைமையில் மூன்றாவது குழு. கருணாநிதி தலைமையில் சென்ற போராட்டக் குழுவினரை காவல்துறையினர் கண்டுகொள்ளாததால், அவர் கவன ஈர்ப்புக்காக, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் வந்த கவிஞர் கண்ணதாசன் தலைமையிலான குழு ஆக்ரோஷமாக போராடியது. அவர்களை காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தலையிலும் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் கைது செய்யப்பட்டனர். வழக்கின் முடிவில், கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். ஆனால், கருணாநிதி, மூன்று மாதத்திலேயே விடுதலை ஆனார். இதை வனவாசத்திலேயே எழுதி இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். கல்லக்குடி போராட்டத்தில், ரத்தம் சிந்தி, உயிருக்கு போராடி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கண்ணதாசன் பெயர் மறைக்கப்பட்டு, சத்தமில்லாமல் காவல்துறை வாகனத்தில் ஏறிச் சென்ற கருணாநிதியை, ‘கல்லக்குடி நாயகன்’ என்று அழைப்பது, மோசடித்தனம். கல்லக்குடி கொண்ட கண்ணதாசன் வாழ்க என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆனால், திமுகவினர் பொய்யைச் சொல்லி லால்குடி மக்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி இன்று ஆட்சி செய்கிறார்கள்.
கல்லக்குடி பேரூராட்சி தலைவராக உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர் பால்துரை, கல்லக்குடி திமுக நகர செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவர், டால்மியா சிமெண்ட் ஆலையில் வேலை வாங்கித் தருவதாக, பலரிடம் பணம் வாங்கிவிட்டு, அவர்களுக்கு வேலை வேண்டும் என டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாகத்தை நிர்ப்பந்தித்துள்ளார். மாமூல் கேட்டும், சிமெண்ட் ஆலை மூலம் நிறைவேற்றப்படும் பணிகளை, தங்களுக்குத் தர வேண்டும் என்றும், நிறுவனத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியிருக்கிறார்கள். டீக்கடை, பஜ்ஜி கடை, பிரியாணி கடை, பியூட்டி பார்லர் என இருந்த திமுகவினர், தற்போது, மிகப்பெரிய சிமெண்ட் ஆலை நிறுவனத்தை மிரட்டும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.