தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டப்பேரவையை கூட்டியிருக்கிறது. பேரவையில் விவாதத்தின்போது தங்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும், நாங்கள் பேசுவது எந்த ஊடகங்களிலும் வெளிவருவதில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.
சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா ஆகிய மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்என் ரவி சமீபத்தில் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்க இன்று தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டியிருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு அவை கூடியவுடன், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான என்.சங்கரய்யாவின் மறைவுக்கும், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவுக்கும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் வேணு, வெங்கடசாமி ஆகியோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அரசின் தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனையடுத்து விவாதங்கள் எழுந்துள்ளன. விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பபாடி பழனிசாமி தங்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும், நாங்கள் பேசுவது எந்த ஊடகங்களிலும் வெளிவருவதில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர், withheld என்று திருப்பி அனுப்பியிருக்கிறார். இப்படி அனுப்பிய பின்னர் அந்த மசோதாக்கள் குறித்து மீண்டும் அவையில் விவாதிக்க உரிமை இருக்கிறதா? என்கிற கோணத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியிருந்தார். இந்த விவாதத்தில் அவர் பேசுகையில், “அளுநர் கால தாமதம் செய்தது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது இதை ஏன் மறு பரிசீலனை செய்ய வேண்டும்?” என்று கேள்வியெழுப்பினார்.
இக்கேள்விக்கு குறிக்கிட்டு சபாநாயகர் விளக்கமளித்தார். இதை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி “பேரவை தலைவர் அவர்களே நீங்கள் நடுநிலையோடு இருக்கக்கூடியவர்கள். அமைச்சர் சொல்ல வேண்டிய கருத்தை நீங்களே சொல்லிவிடுகிறீர்கள். இதற்கு எல்லா இலாக்காவையும் நீங்களே எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு இலாக்காவுக்கும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். எனவே கேள்வி தொடர்பாக அவர்கள் பதிலளிப்பார்கள். ஆனால் நீங்களே பதில் சொல்லிவிடும்போது நாங்கள் பேசுவது எந்த ஊடகத்திலும் வருவது கிடையாது” என்று விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் பேசுவது அனைத்து ஊடகங்களிலும் இடம் பெறும் என்று உறுதியளித்துள்ளார்.