முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீர்மானத்துக்கு ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு தானும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட முன்வடிவுகள் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக நிலுவையில் வைத்து இருந்தார். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த நிலையில் எந்த காரணத்தையும் குறிப்பிடாமல் ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த நவம்பர் 13 ஆம் தேதி ஏற்பிசைவு அளிப்பதை நிறுத்தி வைப்பதாக சட்ட முன்வடிவில் குறிப்பிட்டு அதை திருப்பி அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் இதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அதில் விதி 143 இன் கீழ் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட முன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மறு ஆய்வு செய்திடும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு திமுக எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், பாமக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். வாக்கெடுப்புக்கு முன்பாகவே பாஜகவும் அதை தொடர்ந்து அதிமுகவும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இறுதியாக இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவை ஒத்தி வைக்கப்பட்ட பின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்றைய சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் 15 வது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 தீர்மானங்களையும், திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட முன்வடிவுகளையும் மீண்டும் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு நாங்கள் ஆதரவு அளித்து உள்ளோம். ஏற்கனவே ஜெயலலிதாவின் பெயர் பல்கலைக்கழகத்துக்கு வைக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதையும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். மீண்டும் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் ஜெயலலிதாவின் பெயரோடுதான் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த விபரம் கூட தெரியாமல் அவர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். பொதுவாகவே ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் பரஸ்பர உறவு, தொடர்பு இருக்க வேண்டும் என்பதே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.” என்றார்.