மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
லியோ படத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனிடையே, நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனக்குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரது பேச்சுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் தொடர்ந்து ஆசைப்படலாம், ஆனால் அவரைப் போன்ற மோசமான ஒருவருடன் நான் நடிக்கவில்லை என்பதில் நான் நன்றாக உணர்கிறேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர்’ என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை திரிஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், ‘மன்சூர் அலிகான் இவ்வாறு பேசியிருப்பது எனக்கு மிகவும் மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒரே அணியாக பணியாற்றி இருக்கிறோம். அனைத்து துறைகளிலும் பெண்கள், சக பணியாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும். இந்த நடத்தையை நான் முற்றிலுமாக கண்டிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள நான் இந்த விவகாரத்தை சும்மா விடமாட்டேன் என மன்சூர் அலி கானை விளாசி உள்ளார். நடிகை த்ரிஷா பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்காமல் தப்பாக எடிட் செய்து போட்டு விட்டார்கள் என மன்சூர் அலி கான் அந்தர் பல்டி அடித்து விளக்கம் சொல்லி தப்பிக்க பார்த்துள்ளார். ஆனால், அவர் நடிகைகளை பலாத்கார காட்சியில் தான் எப்படி டீல் செய்து நடித்தேன் என குஷ்பு, ரோஜா உள்ளிட்ட நடிகைகளுடன் நடித்தது குறித்தும், நடிகை த்ரிஷாவுடன் தனக்கு அப்படியொரு சீன் இல்லை என்பது குறித்தும் பேசிய காட்சிகள் இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பெண்கள் என்றாலே மட்டமாக நினைத்து பேசும் எண்ணம் மன்சூர் அலி கானுக்கு எப்படி தோன்றியது. த்ரிஷாவிடம் மட்டும் இல்லை என்னிடமும் என்னுடன் நடித்த சக நடிகைகளிடமும் அவர் நிச்சயம் இதற்காக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என டுவீட் போட்டு விளாசி உள்ளார். மேலும், தேசிய மகளிர் ஆணையத்தில் அங்கத்தினராக இருக்கும் நான், இதுதொடர்பாக மேலிடத்திற்கு செய்தியை அனுப்பி விட்டேன். நிச்சயம் மன்சூர் அலி கான் மீது நடவடிக்கை பாயும் என்றும் நடிகைகளை தவறாக எண்ணும் எண்ணம் இனியும் எவருக்கும் வரக் கூடாது என விளாசி உள்ளார்.