பாலஸ்தீனத்துகான 2-வது தொகுதி உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தது இந்தியா!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலஸ்தீனத்துக்கான இரண்டாவது தொகுதி உதவி பொருட்களை இந்தியா இன்று அனுப்பி வைத்தது. இதனை வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை நாம் தொடந்து வழங்கி வருகிறோம். இரண்டாவது ஏஐஎஃப்-எம்சிசி சி17 விமானம் 32 டன் உதவிப் பொருள்களை ஏற்றிக்கொண்டு எகிப்தின் எல்-அரிஷ் விமானநிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றது” என்று தெரிவித்துள்ளார்.

எல்-அரிஷ் விமான நிலையம் எகிப்தின் எல்லைப்பகுதியில் காசாவுக்கு செல்லும் நுழைவுப் பாதையான ரஃபாவில் இருந்து 45 கிமீ தள்ளியிருக்கிறது. காசாவுக்கான மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்வதற்கான ஒரே பாதையாக காசா மட்டுமே உள்ளது. இஸ்ரேஸ் ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இந்தப் பாதை முழுமையாக செயல்படவில்லை.

முன்னதாக, இந்தியா, மருந்துகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருள்கள் உள்ளிட்ட பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான அடிப்படையிலான தனது முதல் தொகுதி உதவி பொருட்களை அக்.22ம் தேதி அனுப்பிவைத்தது.