தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்!

தமிழக ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி இன்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநர் ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த மசோதாக்களில் சுமார் 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார். இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

இதற்கிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக அரசுக்கு தெரிவித்தார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டடு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும் அனுப்பி வைத்தது. நேற்று நடைபெற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். காரணம் ஏதும் குறிப்பிடாமல் கவர்னர் அனுமதி அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்து, சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையதல்ல, இந்த சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் அனுமதிக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு அனுமதி அளித்திட வேண்டும் என்பதை அவை கவனத்தில் கொள்கிறது எனத் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு மாலையிலேயே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் கடைசி நேரத்தில் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விஷயத்தில் தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. சட்டமன்றம் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் பட்சத்தில் அவற்றுக்கு ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டிய நிலை இருப்பதால், சட்ட ஆலோசனை மேற்கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே தமிழக அரசால் ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் “இது சீரியஸ் மேட்டர்” என கவலை தெரிவித்திருந்தது. ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.