தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல் என்று கூறும் அளவுக்கு பெயர் எடுத்திருக்கிறது அந்தக் கட்சி. மாநில வித்தியாசங்கள் ஏதுமின்றி, இந்தியா முழுவதுமே காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் என்பது மூடி மறைக்க முடியாத ஒன்றாக தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழக காங்கிரஸிலும் உட்கட்சி பூசலுக்கு குறைவு கிடையாது. ஈவிகேஎஸ் இளங்கோவன், ப. சிதம்பரம், தங்கபாலு, கேஎஸ் அழகிரி என்று எப்படி தலைவர்கள் அதிகமோ, அதேபோல, அந்த தலைவர்களுக்கு கீழ் தனித்தனியாக கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் வருடத்தில் இரண்டு முறையாவது சென்னை சத்தியமூர்த்தி பவன் சண்டை மேடையை போல மாறிவிடும். அந்த வகையில், தமிழக காங்கிரஸில் மூடி மூடி மறைத்து வைத்திருந்த உட்கட்சி பூசல் இப்போது பீறிட்டு வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே கே.எஸ். அழகிரியை தலைவர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று பல உள்ளடி வேலைகள் நடந்து வந்த நிலையில், அது தற்போது வெளிப்பட்டு இருக்கிறது. ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், வெளிப்படையாகவே கே.எஸ். அழகிரியை விமர்சித்திருக்கிறார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையைப் பொறுத்துவரை எப்படி நமக்கு வயிற்றுப் பிரச்சினையாக உள்ளதோ, அதேபோல் கர்நாடகாவுக்கும் உள்ளது. எனவே, இப்பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆணையத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், மூத்த தலைவர், முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, முன்னாள் தலைவர், மூத்த தலைவர் என்று அழைத்து வந்த நிலையில், தற்போது முடிந்துபோன தலைவர் என்று அழைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.