எஸ் வி சேகர் வேலைக்கு செல்லும் பெண்களை இழிவாக பேசினாரே, அவரை போய் குஷ்பு கைது செய்ய வேண்டுமா இல்லையா? என மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அந்த பொண்ணு த்ரிஷா அவருடன் நான் நடிப்பதை வெறுக்கிறேன், அவருடன் நான் ஸ்கிரீன் ஷேர் செய்ய மாட்டேன் என கூறிவிட்டு, இப்போ பத்திரிகைகளில் த்ரிஷா போட்டோவையும் என் போட்டோவையும் பக்கத்துல பக்கத்துல போடுறாங்க. எல்லா பேப்பரிலும் எங்கள் போட்டோக்களை பொண்ணு மாப்பிள்ளை மாதிரி போடுறாங்க. அந்த போட்டோவில் என் போட்டோவை நல்லதா தேடி எடுத்து போட்டிருக்கக் கூடாதாப்பா (நிருபர்களிடம் கேட்கிறார்) ஆனால் சில படங்களில் அந்த அம்மாவை (த்ரிஷா)விட நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என் பெயர் ஹாலிவுட் வரை போய்விட்டது.
நடிகர் சங்கம் செய்தது இமாலய தவறு. எந்த விஷயமாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவிட்டுத்தான் அவர்களுடைய நடவடிக்கை குறித்து சொல்ல வேண்டும். சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன? நிஜமாகவா ரேப் செய்கிறார்கள்? சினிமாக்களில் ஹீரோக்களே கொலை செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் நிஜமாகவா கொல்கிறார்கள்?சினிமாவில் ரேப் செய்யுறது என்றால் நிஜமாகவே ரேப் செய்யறதாய்யா (நடிகர் சங்கத்தினர்)? மீரா ஜாஸ்மின் அறிமுகமான படத்தில் ரேப் சீன் வந்தது. அப்போது அவரை கட்டிலில் போட்ட போது இடுப்பில் அடிபட்டு விட்டது. உடனே விலகிய துணியை மூடிவிட்டு, அம்மா அடிப்பட்டதுக்கு மன்னித்துவிடுங்கள் என கூறிவிட்டு அசிஸ்டென்ட்டை அழைத்து அவருக்கு முதலுதவி செய்ய சொன்னேன். இப்படித்தான் ரேப் சீன் இருக்கும்.
தமிழ்நாடே என் பக்கம் இருக்கு. இந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படும் ஆள் நானில்லை. குஷ்பு அவர்களே நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உங்களுக்கு தெரியாதா, ஆந்திராவில் அன்னப்பூரணி ஸ்டூடியோவில் குரூப் டான்ஸராக என்னை பார்த்துள்ளீர்கள். யாரையாவது நான் மோசமாக பேசியுள்ளேனா? எஸ் வி சேகர் வேலைக்கு செல்லும் பெண்களை இழிவாக பேசினாரே, அவரை போய் குஷ்பு கைது செய்ய வேண்டுமா இல்லையா? நீட் தேர்வால் மருத்துவ கனவு கலைந்துவிட்டதால் மனமுடைந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்தாரே! அப்போது என் தமிழகத்தில் மாநில பாடத்திட்டமே நன்றாகத்தானே இருக்கு! ஏன் நீட் பாடத்திட்டம் என குஷ்பு கேட்க வேண்டுமா இல்லையா, மணிப்பூரில் பெண்களை பலாத்காரம் செய்து பிணத்தையும் விட்டு வைக்காமல் டயர் வைத்து எரித்த போது மகளிர் ஆணையம் மணிப்பூர் போனார்களா? இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து முடித்த பிறகு எழுந்து நின்ற மன்சூர் அலிகான், இந்திய தேசிய கீதத்தை பாடினார். ஆனால் அதை பாடியபோது கைகளை ஆட்டியும், தலையை கோதியபடியும் பாடினார். பாடி முடித்த பின்பு அங்கு இருந்த பத்திரிகையாளர்களில் சிலர், தேசிய கீதம் பாடும்போது இந்த ஆக்ஷன் எல்லாம் தேவைதானா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவரோ, ஏங்க நான் நின்றுகொண்டு மரியாதை செய்துதானே பாடல் பாடினேன். நீங்கள் மோடியின் ஆட்களா. என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். நான் தேசிய கீதத்தை அவமதித்ததாக கிளப்பிவிடாதீர்கள் என வாக்குவாதம் செய்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.