திருச்சியில் நடைபெற உள்ள மாவீரர்கள் நாள் விழா நிகழ்வுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது:-
நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என என் உயிர் அண்ணன் பிரபாகரன் சொன்னது போல, ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும். அத்தகைய இலட்சிய இலக்கான, மண்ணின் விடுதலையை அடைய தலைவர் வழிநின்று தன்னிகரற்றபோர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள்.
பிரபாகரன் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் உலகம் இதுவரை கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள். தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தாய் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு கூடிய பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதைக் கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள். அத்தகைய மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் உளம் நெகிழ்ந்து நினைவுகூரப்படுகிறது.
‘மாவீரர் நாள்’ என்பது அழுது புலம்பும் நாள் அல்ல; அது தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவு கூறும் புனித நாள். பகை முடிக்க, படை நடத்தி தாயக விடுதலை என்கின்ற ஒற்றை இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமான மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள். ஏகாதிபத்திய காரிருளை நீக்க, தங்களையே தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் பொருத்தி எதிர்கால இலட்சிய பாதைக்கு வழிகாட்டுகிற திருவிளக்குகளாக அவர்களை நினைத்துப் போற்றி வணங்குகிற பொன்னாள்.
அத்தகைய புனிதத் திருநாளை தமிழர்கள் பெருமளவில் வாழும் தாய் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு மாவீரர் நாளானது மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் (ஜி கார்னர் திடல், டி. வி. எஸ். சுங்கச்சாவடி அருகில்) நாம் தமிழர் கட்சியால் பேரெழுச்சியாக முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், அப்பெருநிகழ்விற்கான ஏற்பாட்டிற்குப் பொருளாதார நெருக்கடி என்பது மிகப்பெரிய பெருந்தடையாக உள்ளது. எனவே நிகழ்வு ஏற்பாட்டிற்கான நிதி பற்றாக்குறையைப் போக்க மக்களிடம் திரள்நிதி (Crowd Funding) திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.