திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு தலைகீழாக மாறி விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆவின் நிர்வாகம் செலவை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. நவம்பர் 25-ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15ஆம் தேதி வரை பெறுவார்கள் என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆவின் நிறுவனத்தின் அறிவிப்புக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
அம்மா ஆட்சியில் நாளொன்றுக்கு சுமார் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்தது. கொழுப்புச் சத்து சமன்படுத்தப்பட்ட நீலநிற பாக்கெட் மற்றும் கொழுப்புச் சத்து சேர்க்கப்பட்ட பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் என்று தமிழகம் முழுவதும் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்தது. அம்மா ஆட்சியில் ஆவின் நிறுவனம் இலாபத்தில் இயங்கியதோடல்லாமல், பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு தலைகீழாக மாறியது. பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பால் கொள்முதல் 20 லட்சம் லிட்டராகக் குறைந்தது.
நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் இம்மாதம் 25ந் தேதி முதல் நிறுத்தப்படும் என்று செய்திகள் தெரிய வருகின்றன. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து எங்கள் ஆட்சியில் இருந்ததுபோல், ஆவின் பாலையே நம்பியுள்ள தமிழக மக்களுக்கு நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.