காஞ்சிபுரம் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்: ராமதாஸ் கடும் கண்டனம்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், வேங்கைவயல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இத்தகைய குற்றச்செயல்கள் தொடரக் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களை அனைவரும் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் மாணவர்கள் குடிநீரை பயன்படுத்தியபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு சென்று பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்களை அந்த குடிநீரை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறி, போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தொட்டியிலிருந்த குடிநீர் முழுவதையும் வெளியேற்றியுள்ளனர். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், குறிப்பாக இளம் மாணவர்கள் அருந்தும் குடிநீரில் மலத்தைக் கலப்பது என்பது மனிதர்களாகப் பிறந்தவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடுமை ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேங்கைவயல் நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இத்தகைய குற்றச்செயல்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாகியிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் வேங்கைவயலில் மனிதநேயமற்ற குற்றத்தை நடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற திருவந்தவார் பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். குடிநீர் தொட்டியில் ஏறி, அதனை திறந்து பார்த்தார். மேலும், பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பள்ளியின் குடிநீர் தொட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதில், தொட்டியின் உள்ளே முட்டை இருப்பது தெரிந்தது. தொட்டி திறந்த நிலையில் இருப்பதால், ஒருவேளை காக்கை போன்ற பறவைகள் கொண்டு வீசியிருக்கலாம் என கருதுகிறோம். மேலும், இந்த தொட்டியின் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பள்ளி வளாகத்தில் வேறு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் தண்ணீரை மாணவர்கள் பெரும்பாலும் கை கழுவுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். அதனால், இந்த தொட்டியை இடிக்குமாறு தெரிவித்துள்ளேன். இதுதொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.