மீனவ இளைஞர்கள், இளம்பெண்களைக் கொண்ட சிறப்பு மெரைன் போலீஸ் படை மத்திய அரசால் அமைக்கப்படும் என, தான் நம்புவதாக, உலக மீனவர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு, கடல்சார் மக்கள் நலசங்கமம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற இவ்விழாவில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் மற்றும் சிறந்தசேவை புரிந்த மீனவ சமுதாயத்தினருக்கு விருதுகளை வழங்கி, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு முக்கியமானது. நிலப்பரப்பில் நமது எல்லையை பாதுகாக்க எல்லைப் பாதுகாப்பு படை, இந்தோ – திபெத் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் போன்ற பல படைகள் இருக்கின்றன. ஆனால் கடல் எல்லையைப் பாதுகாக்க மாநில காவல் துறையும், மீனவர்களும்தான் உள்ளனர். கடல் பாதுகாப்பை எல்லோராலும் செய்துவிட முடியாது. சில மாநிலங்களில் உள்ள மெரைன் போலீஸாருக்கு நீச்சலே தெரியவில்லை. எனவே, மீனவ இளைஞர்கள், இளம்பெண்களைக் கொண்ட சிறப்பு மெரைன் போலீஸ் படை மத்திய அரசால் அமைக்கப்படும் என நம்பு கிறேன்.
நமது நாட்டில் 20 லட்சம் ச.கி.மீ., பரப்பில் கடல்சார் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இப்பகுதியில் நிறைந்துள்ள கடல் வளங்களை முழுமையாக நம்மால் பயன்படுத்த முடியவில்லை. இதற்கான வசதிகள் நமது மீனவர்களிடம் இல்லாததே அதற்கு காரணம். இதனை மீனவர்களுக்குச் செய்து கொடுத்தால், அந்த வளங்களை எடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும்.
உள்ளாட்சி அமைப்புகளிலும், மற்ற உயர் அமைப்புகளிலும் மீனவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறை களையப்பட வேண்டும். நமது நாடு தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சிப் பாதையில் மீனவர்களின் பங்களிப்பை கண்டிப்பாக அங்கீகரிக்க வேண்டும். அதனால்தான் நமது பிரதமர், ‘பிரதம மந்திரி மத்சய சம்பந்த யோஜனா’ என்ற திட்டத்தை மீனவர்களுக்கு வழங்கியுள்ளார். வரும் நாட்களில் இன்னும் பல திட்டங்கள் வரும் என நம்புகிறேன். மீனவ இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு வர வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து பாரம்பரிய மீனவர் சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.