சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்: எடப்பாடி

சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்தது இஸ்ரேல். சுமார் இரண்டு மாதக்காலங்களாக பாலஸ்தீனத்தை ஏவுகணைகளால் துளைத்து எடுத்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். இந்த அதிபயங்கர தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அப்பாவி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இஸ்ரேல் – பாலஸ்தீனம் விவகாரத்தை பொறுத்தவரை, இந்திய அரசின் ஆதரவு என்னவோ இஸ்ரேல் பக்கம் தான் இருக்கிறது. இதனால் முஸ்லிம் நாடுகள் இந்தியா மீது அதிருப்தியில் இருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகளும், பெண்களும் பலியானார்கள். இதற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

காசாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் பலியாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர், அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக நிற்கும் பொதுமக்கள் என காசா ஒரு பேரழிவு நகரமாக காட்சியளிக்கிறது.

உலக நாடுகளின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் அராஜகம் கண்டனத்துக்கு உரியது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பாலஸ்தீன விவகாரத்தில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக அரசியலிலேயே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது, இஸ்ரேல் விவகாரம் எட்பபாடிக்கு இப்போது அவசியமா என திமுகவினரும், நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், இதற்கு பின்னாலும் அரசியல் இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதாவது, பாஜகவை விட்டு அதிமுக விலகினாலும் முஸ்லிம்கள் முன்பு போல அக்கட்சிக்கு ஆதரவாக இல்லை என்பது நிதர்சனமாக தெரிகிறது. பற்றாக்குறைக்கு, திமுக வேறு அதிமுக – பாஜக கூட்டணி பிளவு ஒரு நாடகம் என்றும், அவர்கள் விரைவில் இணைந்து விடுவார்கள் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறது. எனவே தான், இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரை தனக்கு சாதகமாக எடப்பாடி பயன்படுத்துகிறார் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவாக இருப்பதால் பாஜக மீது முஸ்லிம்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தால் அது தனது முஸ்லிம் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன், பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டில் தாங்கள் இருப்பதை காட்டவும் முடியும் என்ற ரீதியில் தான் இந்த அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.