நில மோசடி வழக்கு தொடர்பாக நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பனிடம் விசாரணை நடத்த போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவருக்கு காவல் துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார் நடிகை கவுதமி. இவர் கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி பாஜகவிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் தனக்கு சொந்தமான ஸ்ரீபெரும்புதூர், ராமநாதபுரத்தில் உள்ள ரூ 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜக நிர்வாகி அழகப்பன் கூறியதை கேட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பலராமன் உள்பட இருவருக்கு பொது அதிகாரம் எழுதி கொடுத்தாராம். ஆனால் 25 கோடி மதிப்பிலான இடத்தை பிரச்சினை இருப்பதாக கூறி வெறும் 4 கோடிக்கு அந்த இருவரும் விற்றதாக தெரிவித்தனர். மேலும் அந்த 4 கோடி ரூபாயை கூட இரு தவணைகளாகவே செலுத்தினார்களாம். இந்த நிலையில் கவுதமிக்கு வருமான வரித் துறை சார்பில் வரி செலுத்தவில்லை என நோட்டீஸ் வந்துள்ளது. ஆனால் கவுதமியோ தான் விற்ற இடத்திற்கு கிடைத்த ரூ 4 கோடியில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்திய பிறகும் அவர் இன்னும் வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதமி, நேராக ஸ்ரீபெரும்புதூர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று தான் விற்ற சொத்துகளின் விஷயங்களை கேட்டறிந்தார். அப்போதுதான் அந்த இருவரும் ரூ 11 கோடிக்கு சொத்துகளை விற்றுவிட்டு அதில் வெறும் 4 கோடியை மட்டும் கவுதமிக்கு கொடுத்தது தெரியவந்தது. இந்த பணத்தில் அழகப்பனுக்கு பங்கு போனதாக தெரிகிறது. இதையடுத்துதான் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள், அழகப்பனின் மேனேஜர் ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில்தான் கவுதமி பாஜகவிலிருந்து விலகினார். அதன்பிறகு அழகப்பன் மீது 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அழகப்பன் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் காரைக்குடி கோட்டையூரில், சிவகங்கை, மதுரை ஆகிய இடங்களில் அழகப்பனுக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சோதனை நடந்தது. சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து 11 அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த 11 அறைகளில் என்ன இருக்கிறது என தெரியவில்லை. இந்த வகையில் பலராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கவுதமியின் புகாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழகப்பனுக்கு 6 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக விமான நிலையங்களில் அழகப்பனுக்கும் மனைவி நாச்சியம்மாளுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.