காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனிதர்களே இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இது குறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீண்டாமை ஒரு பாவச்செயல்; பெருங்குற்றம்; மனிதத் தன்மையற்ற செயல் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது தமிழ்நாடு அரசு. ஆனால், சாதி ஆதிக்கம் தலைவிரித்தாடிவரும் சமூகத்தில், இச்சொற்களுக்கெல்லாம் நடைமுறையில் எந்த மதிப்பும் இல்லை என்பதை, மீண்டுமொரு முறை நமக்கு உணர்த்தி இருக்கிறது திருவந்தார் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நிகழ்வு.
காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தார் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில், சாதி ஆதிக்க சக்திகள் சிலர் மனித மலத்தை கலந்திருப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. திருவந்தார் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் உண்மையிலேயே மனிதர்களா அல்லது மிருகமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 5 அறிவு கொண்ட மிருகம் கூட இப்படியான கொடூரச் செயலை நிகழ்த்தி இருக்காது. தமிழ்நாட்டில் தமிழர்கள் என்ற ஒன்றை புள்ளியில் நிற்காமல், ஆதிக்க சாதி சக்திகள் சிலர், பட்டியலின மக்கள் மீது ஆணவ படுகொலைகள், தாக்குதல்கள் என மேற்கொண்டு வரும் வன்முறை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருவது என்பது அறியாமையின் உச்சமாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டு, அவ்விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. மனித சமூகமே வெட்கித் தலை குனியக் கூடிய இந்த சம்பவம் நடைபெற்று 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனை குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விவகாரத்திலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டையே உலுக்கிய இக்கோரச்சம்பவங்களில் தொடர்புடைய சாதிவெறியர்களைக் கைது செய்யாமல், தமிழ்நாடு அரசு மெத்தெனப் போக்கோடு செயல்பட்ட காரணத்தினாலேயே, மீண்டுமொரு மனிதாபிமானம் அற்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தமிழ்நாடு அரசு என்ன செய்து விட முடியும் என்ற ஆணவமே, திருவந்தார் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கக் கூடிய தைரியத்தை சாதி ஆதிக்க சக்திகளுக்கு கொடுத்துள்ளது. வேண்டுமென்றே இத்தகைய கொடூரச் செயலில் சாதி ஆதிக்க சக்திகள் சிலர் ஈடுபட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட எந்த ஒரு வன்முறை குற்றத்திலும் ஆதிக்க சாதி வெறியர்கள் முழுமையாகவும் நியாயமாகவும் தண்டிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட அரசின் செயல்பாடுகளும் பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் குறையாமலிருப்பதற்கு முக்கிய காரணமாகும். எனவே, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சாதி ஆதிக்க சக்திகளை கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.