அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது என்றும் அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த 14 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 16 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், மூலைக்கு செல்லும் ரத்தக்குழாயிலும் அடைப்பு இருப்பது சமீபத்திய மருத்துவ சோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது என்று கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன், மன அழுத்தம் காரணமாக அவருக்கு பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.