எல்லாருக்கும் எல்லாமும் என்பது, இந்த சனானதத்தில் கிடையாது: கரு பழனியப்பன்!

பிரபல டைரக்டர், கரு பழனியப்பன் சனாதனம் குறித்து பேசிய பேச்சு, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர் வடக்கு பகுதி திமுக சார்பில், ஓட்டேரியில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.. “கதை, திரைக்கதை, வசனம் கலைஞரே என்றைக்கும் சிகரம்” என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது. பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில், நடந்த இந்த கூட்டத்திற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் பிரபல நடிகை குட்டி பத்மினி, டைரக்டர் கரு.பழனியப்பன், திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த கருத்தங்கில் கரு.பழனியப்பன் பேசியதாவது:-

கலைஞர் கருணாநிதி, தன்னுடைய எழுத்தால் அரசியலுக்கு வருவதற்கு முன்பே சொந்த வீடு வாங்கிவிட்டார்.. திராவிட இயக்க தலைவர்களில் முதலில் கார் வாங்கியது கலைஞர்தான். நடிகராக சிவாஜி 250 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்திலேயே, எழுத்தாளராக வசனகர்த்தாவாக 500 ரூபாய் சம்பளம் வாங்கியவர் கலைஞர் கருணாநிதிதான். அப்போது அவர் 500 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில், தங்கத்தின் விலை கிராம் வெறும் 10 ரூபாய்தான். அந்தவகையில், கலைஞரை செல்வந்தனாக மாற்றியது தமிழ் சினிமா.

குழித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவாகவும் பதவியேற்றார். கலைஞர் இறப்பிற்கு தமிழகத்தின் கட்சி சார்பின்றி அனைத்து தரப்பட்ட மகளிரும் கண்ணீர் வடித்தார்கள்.. காரணம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர் என்பதை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களும் அறிந்திருந்தனர். எழுத்து, பேச்சு, வசனம் என்று தான் தொட்ட இடங்கள் அத்தனையிலும் ஜொலித்தார் கலைஞர்.. அதனால்தான், இன்று அவரை பற்றி 100 கூட்டங்களிலும் பேச முடிகிறது.

எம்ஜிஆரை விட, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகத்தில் பெண்கள் ஆதரவு அதிகரித்தே காணப்படுகிறது.. அதற்கு இங்கு நடந்து வரும் கூட்டமே சாட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை ஆட்சி வந்தாலும், மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை ரத்து செய்யவே முடியாது. இந்தியாவில் எல்லாம் மாநிலங்களுக்கும் முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சியே உள்ளது. வரும் எம்பி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுகவிற்கு தமிழகத்தின் பெண்கள் பெற்று தருவார்கள். முதல்வர் ஸ்டாலின் சொல்வதை போல 40 தொகுதியிலும் வெற்றி பெற்றால் தான், நம்முடைய குரல் இன்னமும் வலிமையானதாக இருக்கும். சத்தமா பேசினாதால்தான் அவங்களுக்கு கேட்கும். அதுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.

சனாதன ஒழிப்பை பேசிவிட்டு, மறுநாளே கும்பாபிஷேகத்துக்கு போனார் அமைச்சர் சேகர்காபு .. இதை பார்த்துதான் பிஜேபி இப்போ குழம்பி போயுள்ளது.. ஆன்மீகம் என்பது வேறு, சனாதீகம் என்பது வேறு.. சனாதனம் என்பது சாமி கும்பிடுவதா? சனாதனம் என்பது சாமி கும்பிடுவதை மறுப்பதா? கிடையவே கிடையாது.. அது நாத்திகம்.. அது பெரியார் பேசியது. அப்படியானால் சனாதனம் என்பது என்ன? மனிதன் ஒருவருக்கொருவர் இணையானவன் கிடையாது. ஒருத்தன் தலையில் பிறந்தவன் ஒருத்தன் கால்ல பிறந்தவன், ஒருத்தன் மேலே உட்காரு, ஒருத்தன் கீழே உட்காரு என்று சொல்வதுதான் சனாதனம். எல்லாருக்கும் எல்லாமும் என்பது, இந்த சனானதத்தில் கிடையாது. கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.. அவர்கள் பெற்ற உலக கோப்பையின் மீது, அந்த விளையாட்டு வீரர் கால் வைத்திருந்தார். உடனே நம்ம தேசபக்தர்கள் எல்லாருமே கொந்தளித்து போய்விட்டார்கள். ஜெயிச்சவன் காலை எங்கே வெச்சால் உனக்கென்ன? ஒரு கோப்பை மேலே, கால் வெச்சதுக்கே இப்படி கதறியே, நீ பல காலமாகவே, என்னை காலில் பிறந்தவன் என்றுதானே சொல்லிட்டு இருக்கே? மனிதன் காலில் பிறக்கலாமா? ஆக, எதை கொண்டாட வேண்டுமோ அதை கொண்டாடாமல், எதை மதிக்க வேண்டுமோ அதை மதிக்காமல், மனிதனை கீழே தள்ளுவதுதான் பெயர்தான் சனாதனம். இவ்வாறு கரு.பழனியப்பன் பேசினார்.